ஸ்ரீ காயத்ரி மந்திரம்
படைப்புக் கடவுள் பிரம்மதேவனின் மனைவியான காயத்ரி, மிகுந்த சக்தி படைத்தவள். வெவ்வேறு காலத்தைப் பொருத்து, வேறு வேறு பெயர்களுடன், வெவ்வேறு
உருவங்களுடன் இந்த காயத்ரி தேவி தியானிக்கப் பெறுகிறாள்!
காலையில் அவள் பெயர் காயத்ரி. மதியம் சாவித்ரி. மாலையில் சரஸ்வதி. இப்படி
ஒரே தேவதை மூன்று பெயர்களில் அழைக்கப்படுவதை `பராசர மஹாத்மியம்' என்னும்
நூல் எடுத்துரைக்கிறது!
இந்த தேவதை ஒருத்தி தான் என்றாலும் அவள் தன்னை ஜபிப்பவனை காப்பாற்றுவதால்
காயத்ரி; சூரியனைப்போல் பிரகாசிப்பதால் சாவித்ரி; மொழி வடிவாக இருப்பதால்,
சரஸ்வதி. கால வித்தியாசத்துக்கேற்ப வடிவம் மாறினாலும், ஒரே மாதிரி
யாகத்தான் தியானம்!
காயத்ரியை மும்மூர்த்திகளும் தியானம் செய்ததாக புராணம் கூறுகிறது. மும்
மூர்த்திகளும் குழந்தையாக இருந்தார்கள். காயத்ரிதேவி, வேதங்களைச்
சங்கிலியாக்கினாள்; ஆகாசத்தைத் தொட்டிலாக்கினாள்; பிரணவ மந் திரத்தைத்
தாலாட்டாகப் பாடினாள்.
பிரம்மன் (சத்வம்), விஷ்ணு (ரஜஸ்), சிவன் (தமஸ்) ஆகியோர் குணவயப்பட்டுத்
தூங்கிவிட்டார்கள். பிறகு நீண்ட நேரம் கழித்தே விழித்தார்கள். காலப்
போக்கில் வளர்ந்த அவர்கள் தம் குணங்களின் சக்தியால் ஆகாயத்தில் திரிய ஆரம்
பித்தனர். அவர்களுக்குத் திடீரென்று அன்னை காயத்ரியின் நினைவு வரவே, கடும்
தவம் ஆற்றினர். இறுதியில் காயத்ரி காட்சி தந்தாள். உலகத்து மக்கள்
`தியானத்தின் மேன்மை' அறிய அவள் நிகழ்த்திய திருவிளையாடல் இது என்பது
புராணம். தன்னைத் தியானிப்பவர்களின் சஞ்சலம் தீர்ப்பவள் இந்த காயத்ரி!
காயத்ரி மந்திரத்தின் பெருமை அளவிட முடியாது. விசுவாமித்திர மகரிஷியின் பெருமைக்கு அடித்தளமே இந்த காயத்ரிதேவிதான்!
காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துகள் உள்ளன. வால்மீகி முனிவர் ஒரு
எழுத்துக்கு ஆயிரம் ஸ்லோகம் வீதம் 24 ஆயிரம் ஸ்லோகங்களில் அதே எழுத்து
வரிசையில் எழுதினார். அதனால்தான் ராமாயணத்தை `காயத்ரி மந்திர ஸ்வரூபம்'
என்கிறார்கள்.
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி |
தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
ஓம் அல்லது ஓங்காரம் ஓசைகள் அனைத்துக்கும் முதல் காரணம். இது நாதப்
பிரம்மம் என்று இயம்பப் பெறுகிறது. பரவஸ்து ஓசை வடிவத்தில் இலங்குகிறது.
அகிலாண்டத்தின் இயக்கம் ஓசையை உண்டுபண்ணுகிறது. அந்த ஓசையே ஓங்காரம்.
ஓங்கார ஓசை இயற்கை முழுவதிலும் ஓவாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ஓவாத
சத்தத்து ஒலியே போற்றி” என்று இது போற்றப் படுகிறது. ஓம் என்பது பீஜ
மந்திரம். இதன் திரிவுகளாக ஏனைய மந்திரங்கள் வந்துள்ளன. ஓங்காரத்தை
உச்சரிப்பதற்கு ஏற்ப மனிதன் மேன்மையுறுகிறான். இயற்கை முழுதுக்கும் பொதுவாக
அண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இம்மந்திரத்தை யாரோ சிலர் தான்
உச்சரிக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடு எதற்காக? சுவாசிக்கும் காற்று
எல்லார்க்கும் பொதுவாக இருப்பது போன்று இந்த ஓசையும் பொது.
ஓங்காரத்தை உச்சரித்த பிறகே ஏனைய மந்திரங்களை உச்சரிப்பது ஐதிகம்.
ஏனென்றால் மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமந்திரமாக அல்லது பீஜமந்திரமாக
இருப்பது ஓங்காரம். இதற்கு ஸ்தூல விளக்கம் தருவோம். கணபதி பூஜை பண்ணிய
பிறகே ஏனைய தெய்வங்கள் போற்றப் படுகின்றன. கண்பதி ஓங்கார மூர்த்தி. கணபதி
வழிபாடு எல்லார்க்கும் சொந்தம். அதினின்றே அவருக்குரிய ஓசை அல்லது மந்திரம்
எல்லார்க்கும் பொது என்பது வெளியாகிறது.
பூ: , புவ:, ஸுவ: ஆகிய மூன்று சொற்கள் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கம்
எனப் பொருள்படுகின்றன. இம்மூவுலகங்கள் அகத்திலும் இருக்கின்றன, புறத்திலும்
இருக்கின்றன. பண்பாடு அடையாதவர்களுக்கு அம் மூவுலகும் புறத்தில் உள
என்னும் கொள்கை ஏற்புடையதாகிறது. அகத்திலேயே அம்மூன்றும் அமைந்துள்ளன
என்னும் கொள்கை சிறிது பரிபாகம் அடைந்தவர்களுக்கே விளங்குகிறது.
ஜாக்ரதாவஸ்தை, சொப்பனாவஸ்தை, சுஷுப்தி அவஸ்தை ஆகிய மூன்று அவஸ்தைகளும்
(நிலைகள்) நம்மிடத்து மாறி மாறி அமைகின்றன. மக்கள் மட்டும் அல்லர்;
பறவைகளும், விலங்குகளும் இந்த மூன்று நிலைகளை அனுபவிக்கின்றன.
நனவு அல்லது விழித்திருந்து புறவுலகோடு இணக்கம் வைப்பது ஜாக்ரதாவஸ்தை. நனவு
நிலையில் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் வேலை செய்கின்றன. கனவு என்பது
சொப்பனாவஸ்தை. கனவு நிலையில் புறவுலகோடு தொடர்பு வைப்பதில்லை. ஸ்தூல
சரீரத்துக்கும் அங்கு வேலையில்லை. அகக் கரணமாகிய மனதே கற்பனையில் ஸ்தூல
சரீரத்தையும், புறவுலகத்தையும், அதிலுள்ள உயிர்வகைகளையும் கற்பனை பண்ணிக்
கொண்டு வியவகாரம் பண்ணுகிறது. அந்நிலையில் இருக்கின்ற பொழுது அது யாண்டும்
ஜாக்ரதாவஸ்தைக்கு நிகராகத் தோன்றுகின்றது. கனவற்ற உறக்கம் சுஷுப்தி அவஸ்தை
எனப்படுகிறது. அந்த அவஸ்தையில் அகவுலகம் இல்லை; புறவுலகம் இல்லை. மனதும்
செயலற்றுக் கிடக்கிறது. பிரக்ஞை மட்டும் தமோகுணத்தால் [மூவகைக் குணங்களில்
ஒன்றான இருள் இயல்பு] மூடப்பட்டிருப்பது போன்று தன்மயமாய்
எஞ்சியிருக்கிறது.
விழித்திருக்கின்ற பொழுது நாம் சுவாசிக்கின்றோம்; கனவு காண்கின்ற பொழுதும்
சுவாசிக்கின்றோம்; கனவற்ற உறக்கத்திலும் சுவாசிக்கின்றோம். சுவாசிப்பதை
நிறுத்துவதில்லை. நிறுத்தினால் ஒழிந்துபட்டுப் போவோம். நிர்விகல்ப
சமாதியில் (அனைத்து உணர்வுகளும் ஒடுங்கும் ஒருமை நிலை) இருப்பவர்கள்
மட்டும் சுவாசிக்காதும், அழிந்துபட்டுப் போகாமலும் இருக்கின்றனர். மூன்று
அவஸ்தைகளிலும் நிறுத்தாது நாம் சுவாசித்து வருவது போன்று மூன்று
அவஸ்தைகளிலும் காயத்ரியில் அடங்கியிருக்கிற கருத்துக்கேற்ப நம்முடைய
மனத்தைப் பெரிய நிலையில் வைப்போமானால் அதற்கேற்றவாறு ஆத்ம பரிபாகம் நமக்கு
வாய்க்கிறது.
No comments:
Post a Comment