ராம நாமத்தின் இரகசியம்
தாரக மந்திரம் என்றால் கடக்க உதவும் மந்திரம் என்று பொருள். இந்தக் கலியுகத்தில் தவம் செய்வது அவ்வளவு எளிதல்ல. பக்தியில் மனதை செலுத்துவதும் மிகக் கடினமானதாகும். நாம ஜெபமுமே இறை நிலையை அடைய சிறந்த உபாயமாகச் சொல்லப்படுகிறது. மனதை அடக்கி, புலன்களை வசப்படுத்தி தவம் செய்பவர்கள் இருந்தாலும், எல்லோருக்கும் அது சாத்தியமாவதில்லை. அது போலவே பக்தி என்கிற சாதனையிலும் அதே நிலைதான். இதை உத்தேசித்தே நாம ஜெபங்கள், மந்திர ஜெபங்கள் சித்தர்களாலும், ரிஷிகளாலும் முன்னரே தரப்பட்டுள்ளன. எனவே இந்தக் கலியுகத்தில் மாயை எனும் கடலைக் கடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் குரு மூலமாக மந்திர உபதேசம் பெற்று ஜெபித்து வர மேன்மை உண்டாகும். இதில் ராம நாமம் மிகவும் உன்னதமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஔவை சொல்கிறார்
பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரநந்தியாம்.
இதில் பேசா எழுத்து ம. இது மெய். பேசும் எழுத்து ரா. இது உயிர். அதாவது ஒலியுடன் ஒளி கூடி வரும் ராம மந்திரத்தை முறைப்படி ஜெபித்தால் அதுவே ஆச்சாரியனாக இருந்து உண்மை நிலையை, இரகசியங்களை விளக்கிக் காட்டும் என்கிறார்.சித்தர்சிவவாக்கியர் ராமநாமத்தின் சிறப்பை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்.
ரா என்றால் சூரியன், ம என்றால் சந்திரன். சூரியன் ஆன்மக்காரகன். சந்திரன் மனோகாரகன். அதாவது சூரியன் பரமாத்மா. சந்திரன் ஜீவாத்மா. அதாவது பரமாத்மாவோடு ஜீவாத்மாவை இணைக்க உதவும் மந்திரமே ராம நாமம் ஆகும். இதில் வாசிக் கலையின் பங்கும் மறைந்துள்ளது. அதாவது சூரியகலையின் எழுத்தாகிய ரா, சந்திர கலையின் எழுத்தாகிய மா இரண்டையும் சேர்த்து உச்சரித்து வரவர சுழுமுனை திறக்கும். யோசித்துப் பாருங்கள் நான் சொல்வதில் உள்ள நுட்பம் புரியும்.
அத்யோ ‘ரா’ தத்பதார்த்தஸ்யாத்
‘ம’ கார த்வம்பதார்த்தவாந், தயோ
ஸம்யோஜந மஸித்யர்த்தே தத்த்வலிதோ விதுஹூ.
- ராமரஹஸ்யோபநிஷத்.
அதாவது ரா என்றால் தத், பரப்பிரம்மம். மா என்றால் த்வம், ஜீவாத்மா. அதாவது நிராகார(ரூபமில்லாத) பரப்பிரம்மமே ஒவ்வொரு ஜீவஜந்துக்களின் உள்ளும் ஆத்மா என்ற பெரில் விளங்குகிறது. ப்ரம்மம், ஆத்மா என்ற பேதமேயொழிய இரண்டும் ஒன்றே. அதாவது தூல சரீரம் கண்களால் காணப்படுவது. அதற்குள் மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்று நான்குமாகி தொழிற்படும் சரீரங்கள் சூக்கும, காரண சரீரங்கள். இந்த சரீரங்களின் இன்ப, துனபத்திற்கு காரணமாக இருப்பது சஞ்சித கர்மமே. எனவே இந்த மூன்று சரீரங்களின் உணர்வும் அற்றுப் போனால் மட்டுமே பரமாத்மாவை அடைய முடியும். இந்த மூன்று தேகங்களுக்கும் சாட்சியாக இருக்கும் ஆன்மாவே ராம என்று சொல்லப்படுகிறது. இதை மனதில் நினைத்துக் கொண்டோ, வாக்கினால் சொல்லிக் கொண்டோ இருப்பதினால் உண்மை நிலையை அடைய முடியாது. அதற்கு சில விதி முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அவை காலப் போக்கில் குறிப்பிட்ட இனத்தவர்களால் மறைக்கப்பட்டு விட்டன. இப்போது அந்த வாசல் உங்களுக்குத் திறக்கப்படுகிறது. தேவை உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு தனிமையான இருட்டறையில் நெய்விளக்கேற்றி, பலகையிட்டு, அதன் மேல் விரிப்பு விரித்து வடக்கு நோக்கி சித்தாசனத்தில் சின்முத்திரை பிடித்து அமர்ந்து கொண்டு, கண்களை மூடி, மூக்கு நுனியில் மனதை நிறுத்தி, மூச்சை உள் இழுக்கும் போது ரா என்ற மந்திரத்தை மனதினால் நினைத்து மூச்சுடன் உள்ளிழுத்து, மெதுவாக மூச்சை வெளிவிடும் போது மா என்ற மந்திரத்தை மனதில் நினைத்து வெளியே விடவேண்டும். ஒரு தடவை மூச்சுவிடும் போதும் ஒரு ரா, ஒரு மா என்று விடவேண்டும். இவ்வாறு மூச்சுடன் சேர்த்து ஜெபம் செய்து வரவர பலனை உணரலாம். இது ரஹஸ்யமான உபதேசம் என்று வெளியில் சொல்லாமல் மறைப்பார்கள். இன்று இறையருளாலும், சித்தர் சிவவாக்கியரின் அருளாலும் என்மூலம் திறக்கப்பட்டது. குரு முகமாக மந்திர தீட்சை பெறுவது சாலச் சிறந்தது. இயலாதவர்கள் தட்சிணா மூர்த்தியையோ, திருச்செந்தூர் முருகனையோ குருவாக எண்ணி சாதனையைத் தொடங்கலாம். திருச்செந்தூர் சென்று குளித்து விட்டு வினாயகரை வணங்கி, முருகனை வணங்கி, குருவாகத் திகழும்படி வேண்டிக் கொண்டு, பிரகாரம் சுற்றி வரும் போது, முருகனுக்கு எதிரில் சுவற்றில் காணப்படும் துவாரத்தில் காதை வைக்கும் போது ஓம், ஓம் என்ற ஓசை கேட்கும். இதுவே முருகன் அருளும் மந்திர தீட்சையாகும்
No comments:
Post a Comment