ஸ்ரீ அகத்திய மகரிஷி
“ஸ்ரீ அகத்திய மகரிஷி ” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம். கும்பமுனி, குருமுனி, தமிழ்முனி என்றெல்லாம் சிறப்பித்து அழைக்கப்படுபவர் நம் அகத்தியர் பெருமான். சித்தர்களுக்கெல்லாம் தலைவர் இவரே. முக்காலமும் அறிந்தவர். கடவுளர் அனைவரின் அருளை ஒருங்கே பெற்றவர் நம் ஸ்ரீ அகத்தியர் பெருமான்.
ஸ்ரீ அகத்தியர் வாழும் மலை பொதிகை மலை ஆகும். சிவபெருமானின் திருமணத்தின் போது ஏற்பட்ட பூமி சமமற்ற நிலையை நீக்க இறைவனால் தென்னாடு அனுப்பப்பட்டவர். தென்னாட்டில் சிவசக்தி திருமணத்தை இறைவன் அருளால் கண்டவர். சித்த மருத்துவத்தின் தந்தை இவரே. இவருக்கு தெரியாத மருத்துவ முறைகளே இல்லை. அகத்தியர் மருத்துவம் மட்டுமல்லாமல் மணி, மந்திரம், சோதிடம், வானவியல், தமிழ், சமஸ்கிருதம், ரசவாதம் இவற்றிலெல்லாம் சிறந்து விளங்கியவர்.
சிவபெருமானின் மகனான குமரக்கடவுளிடம் தமிழ் கற்றவர். தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர். கருணையில் தாயைவிட மேலானவர். வீணை வாசிப்பதில் சிறந்த சிவபக்தனும் இலங்கை வேந்தனுமாகிய இராவணனை வென்றவர். காவிரியை அடக்கி கமண்டலத்தில் நிறுத்தியவர். அறுமுகக்கடவுளின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமானவர். ஏழுகடல் நீரை குடித்து இந்திரனுக்கு போரில் உதவியவர். விந்தியமலையை அடக்கியவர். வாதாபி, வல்லபன் ஆகிய அரக்கர்களை அழித்தவர்.
ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் மற்றும் சிவகீதை இவற்றை உபதேசித்தவர். கும்பத்திலிருந்து தோன்றியவர். தமிழை வளர்த்த சித்தர் ஸ்ரீ அகத்தியர். முருகனின் ஆணைக்கிணங்க அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை இயற்றியவர். சித்தர்களுக்கெல்லாம் சித்தர். இவர் இயற்றிய அகத்தியர் ஜீவநாடி நூல் மிகவும் புகழ் பெற்றது. அகத்தியர் எழுதிய நூல்கள் பல. அவற்றுள் சில மட்டுமே கிடைத்துள்ளன. மின்சாரத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் அகத்தியரே. இதற்கு அகத்தியர் சமஸ்கிருத மொழியில் இயற்றிய அகத்திய சம்ஹிதை என்ற நூலே சாட்சி.
அகத்தியருக்கு சிவபெருமான் எப்போது காட்சியளித்தாலும் திருமணக்கோலத்திலேயே காட்சி தந்துள்ளார். அகத்தியரின் காலம் 9000 ஆண்டுகளுக்கு முன்பானது. இன்றும் அகத்தியர் ஜீவநாடியில் நம்மில் பலருக்கு வழிகாட்டியுள்ளார். இவரின் கருணை அளவிடற்கரியது. எல்லா உயிர்களின் துயரை துடைத்து அருள்புரிந்து கொண்டிருக்கிறார். நவகிரகங்களில் புதனை பிரதிபலிப்பவர். அறிவின் சிகரம். சித்த வைத்தியத்தின் பிதாமகர் இவரே.
அகத்தியரின் வேறு பெயர்கள்:
தமிழ் முனி
மாதவ முனி
மாமுனி
குறுமுனி
குருமுனி
திருமுனி
முதல் சித்தர்
பொதிகை முனி
அமர முனி
குடமுனி
No comments:
Post a Comment