Thursday, October 29, 2015

சித்தர்கள் இஷ்ட தெய்வமாக வணங்கிய வாலாம்பிகை அம்மன்



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர். இந்த கிராமத்தில் ஸ்ரீவாலைகுருசாமி கோவில் இருக்கிறது. இத்தலத்தில் சித்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வமாக வணங்கிய வாலாம்பிகை அம்மன் அருள்பாலித்து வருகிறாள். இந்த அம்மனுக்கு பாலாம்பிகை என்ற பெயரும் உண்டு.

கொம்மடிக்கோட்டையில் குடிகொண்டிருக்கும் வாலாம்பிகை, தனக்கு ஒரு ‘குரு’ வேண்டும் என்று எண்ணி, வடக்கில் இருந்து ஸ்ரீவாலைகுருசாமியையும் (சிவன்), காசியானந்தரையும் சுமார் 800 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்துக்கு அழைத்து வந்ததாகவும், அவர்களுக்கு தன்னுடைய இடத்திலேயே ஆலயம் அமைத்து வணங்கியதாகவும் தல வரலாறு கூறுகிறது.

இங்கு வாலைகுருசாமியும், காசியானந்தரும் ஒரே கருவறையில் பிரதான தெய்வங்களாக காட்சி தருகின்றனர். அபூர்வமாக காட்சி தரும் அந்த இருவரையும் முழுமையாக சரண் அடைந்தால், குருவின் அனுக்கிரகத்தையும், அனைத்து பாக்கியங்களையும் பெறலாம். மேலும் வாலாம்பிகையின் தரிசனமும் ஒரே இடத்தில் கிடைப்பது அற்புதத்திலும் அற்புதம்.

இதனை அறிந்த சித்தர்கள் இங்கு வந்து, வாலைகுருசாமி–காசியானந்தருடன் வாலாம்பிகையையும் வணங்கி இருக்கிறார்கள். இதற்கு சித்தர்கள் பாடிய பாடல்கள் சான்றாக உள்ளன.

வாலாம்பிகை பற்றி திருமூலர் தனது திருமந்திரத்தில்,

‘சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண்பிள்ளை
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்
பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்

சுத்திய நாய் போல கதறுகின்றனவே’ – என்று பாடி உள்ளார்.

இத்தகைய சிறப்பு மிக்க ஸ்ரீவாலைகுருசுவாமி கோவிலில் ஸ்ரீசந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சன்னிதி, ஸ்ரீகன்னி விநாயகர் சன்னிதி, ஸ்ரீபாலமுருகன் சன்னிதி, ஸ்ரீ சொர்ண ஆகார்ஷண பைரவர் சன்னிதிகளும் உள்ளன.

மனோன்மணி என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. மனதை அழித்து ஞானநிலைக்கு அழைத்துச் செல்பவள் என்பது இதன் பொருள். புருவ மத்திக்கு மேலே, பிரம்ம மந்திரத்திற்கு கீழ் உள்ள, பிந்து முதலிய எண் வகை நிலைகளில் இறுதி நிலை உன்மனி எனும் மனோன்மணியாகும். அங்கு உறைவதால் இவளுக்கு மனோன்மணி என்றும் பெயர். பற்றற்ற நிலையில் மனம் இயங்குதல். அற்று நிற்கும் நிலை உன்மனி. அந்த நிலையில் அருள்புரிவதால் அம்பிகைக்கு இப்பெயர் ஏற்பட்டது. மனோன்மணி வடிவில் இருப்பதும் பாலாம்பிகையே.

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி, சொர்ண ஆகார்ஷண பைரவர் சன்னிதி அமைந்துள்ளது. சித்தர்கள் அனைவரும், அஷ்டமா சித்திகளை எளிதில் பெறுவதற்கு சொர்ண ஆகார்ஷண பைரவரை வழிபாடு செய்தனர். அவரது அருளாசியாலேயே அனைத்து சித்திகளையும் தடையின்றி எளிதாகப் பெற்றனர். அகத்திய முனிவர், சொர்ண ஆகார்ஷண பைரவரை வழிபட்டு பல வரங்களை பெற்று மகிழ்ந்தார்.

மனதை ஸ்திரப்படுத்தி அன்னை ஸ்ரீவாலையை அணுகுவதற்குரிய மனப்பக்குவத்தை பைரவர் வழிபாடு மூலம் தடையின்றி பெறலாம். நாமும் ஸ்ரீ சொர்ண ஆகார்ஷண பைரவரை வழிபட்டால், நமது ஜென்ம பாவ வினைகள் அனைத்தும் தீரும். நினைத்த காரியம் தடையின்றி எளிதில் கைகூடும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெறுகிறது.

கோவிலின் தல விருட்சமாக மஞ்சணத்தி மரம் உள்ளது. இந்த மரத்தின் இலைகளை நோய் தீர்க்கும் மருந்தாகவும் பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆரம்ப காலத்தில் கோவிலில் இருந்த மஞ்சணத்தியின் வயது பல நூறு வருடங்களுக்கு மேல் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன், அந்த மரம் பட்டுப்போனது. பக்தர்கள் மனக்கவலையுடன் இருந்தனர்.

புதிய மஞ்சணத்தி மரக்கன்றுகளை நடலாம் என யோசனை எழுந்தது. ஆனால் புதிய மரம் எதுவும் நடத் தேவையில்லை. பட்டமரம் துளிர்க்கும் என இறைவனின் உத்தரவு கிடைத்தது. அதே போல பழைய பட்டமரம் துளிர்த்து மரமாகியது. இதைக்கண்ட பக்தர்கள் மனம் குளிர்ந்தது.

இங்கு வருடந்தோறும் ஆவணி, சித்திரை மாதங்களில் திருவிழாக்களும், ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் மனோன்மணி அம்பாள் சமேத ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு திருக்கல்யாண உற்சவமும் பிரசித்தி பெற்றவை. சிவராத்திரி நாளன்று இரவு நான்கு கால பூஜையும், அபிஷேகமும், மார்கழி மாதம் பஜனையும், திருக்கார்த்திகை தினத்தன்று சிறப்பு பூஜையுடன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடக்கின்றன. இதுதவிர மாதந்தோறும் பவுர்ணமி பூஜை, அமாவாசை பூஜை, தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகார்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று இரவு லலிதா சகஸ்ர நாம பாராயணம், திருவிளக்கு பூஜையும் நடக்கின்றன.

No comments:

Post a Comment