Thursday, May 14, 2015

ஸ்ரீ தத்தாத்ரேயர் மகரிஷி

ஸ்ரீ தத்தாத்ரேயர்  மகரிஷி 

அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா, கணவனின் மனம் அறிந்து நடக்கும் பதிவிரதை, கணவனிடம் மிகுந்த பக்தி கொண்டவள். இவள், மும்மூர்த்திகளின் தரிசனம் வேண்டி, தவமிருந்தாள். இதையறிந்த மும்மூர்த்திகளும் அவள் முன், துறவிகள் வடிவில் வந்தனர். அவளது பெருமையை உலகறியச் செய்வதற்காக, தங்களுக்கு நிர்வாணக் கோலத்தில் பிச்சையிடும்படி வேண்டினர். கற்புத்தெய்வமான அனுசூயா, தன் கணவர் அத்திரி மகரிஷியை மனதில் நினைத்து, அவர்கள் மீது, அவர் பாதத்தைக் கழுவிய தீர்த்தத்தை தெளித்தாள். உடனே, மும்மூர்த்திகளும், மூன்று குழந்தைகளாயினர். அந்தக் குழந்தைகளை அத்திரி மகரிஷி ஒன்று சேர்த்து, தத்தாத்ரேயன் என்று, பெயரிட்டு வளர்த்து வந்தார்.
ஒரு நாள், காட்டிற்கு வேட்டையாட வந்த, யது என்ற மன்னன், காட்டில் தத்தாத்ரேயர் ஆனந்தமாக இருந்ததைக் கண்டு, ஐயனே... உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கவலையுடன் வாழுந்து வரும் நிலையில், நீங்களோ வெகு ஆனந்தமாக இருக்கிறீர்களே... உங்களுக்கு இத்தகைய ஆனந்த மார்க்கத்தை கற்றுக் கொடுத்த குரு யார், எனக்கும் கூறுங்கள்... என்று, கேட்டான். எனக்கு ஒன்றல்ல பல குருமார்கள் இருக்கின்றனர்.
அதில், இந்த பூமிதான் முதல் குரு; இதனிடமிருந்து பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும் கற்றேன்.
தண்ணீரிடமிருந்து, சுத்தத்தைக் கற்றேன்.
எல்லாரிடமும் பழகினாலும், யாரிடமும் பற்று வைக்காத குணத்தை, காற்றிடம் படித்தேன்.
பரந்து விரிந்திருந்தாலும், எதனிடமும் தொடர்பு இல்லாதது வானம். அந்த தொடர்பற்ற நிலையை ஆகாயமே எனக்கு தெரிவித்தது.
ஒரே சூரியன் என்றாலும், எல்லா குடங்களின் நீரிலும் பிரதிபலிப்பது போல, பல சரீரங்களை ஒரே ஆத்மா எடுப்பதைப் பார்த்தேன்.
வேடனின் வலையில் சிக்கிய புறாக்களைப் பார்த்து, தானும் சிக்கிய தாய் புறாவைப் பார்த்து, பாசபந்தமே துன்பத்திற்கு காரணம் என, உணர்ந்தேன்.
உணவுக்காக தூண்டிலில் சிக்கிய மீனைப் பார்த்து, ஆசையே சுதந்திரத்தை இழப்பதற்கு காரணம் என்பதை, அறிந்தேன்.
தேனீக்கள் சேர்த்த தேனை, யாரோ ஒருவன் கொண்டு போனதைப் பார்த்து, பொருளை தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்.
உணவுக்காக அங்கும் இங்கும் அலையாமல் இருந்த இடத்திலிருந்த படியே கிடைக்கும் உணவைக் கொண்டு திருப்தியடையும் மலைப்பாம்பைப் போல், நானும் திருப்திப்பட வேண்டும் என, உணர்ந்தேன்... என்று, அடுக்கிக் கொண்டே போனார்.
பார்த்தீர்களா... இயற்கை நமக்கு நன்மைகளை மட்டுமல்ல, உலகவியல் வாழ்வுக்கும் ஆசானாக இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தூன்றி பார்ப்பதுடன், பாதுகாக்கவும் செய்யுங்கள்.
மனிதன் இயற்கையை மதிக்கத் தவறியதால் தான், இன்று, மழை பெய்வது அரிதாகி விட்டது. ஆனால், அந்தக் காலத்தில் அப்படி இல்லை. புழு, பூச்சியைக் கூட தன் குருவாக நினைத்தான் மனிதன். கடவுளே மானிடப் பிறப்பெடுத்து, இயற்கையை குருவாக ஏற்று, அதனிடமிருந்து பாடம் கற்றுக்கொண்ட கதை இது


No comments:

Post a Comment