Friday, October 24, 2014

சென்னிமலை சுப்பிரமணியஸ்வாமி கோவிலில் கந்தசஷ்டி விரதம் இன்று தொடங்குகிறது


சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்
கந்தசஷ்டி விரதம் இன்று தொடங்குகிறது








சென்னிமலை: சென்னிமலை மலை மீது கோவில் கொண்டுள்ள சுப்பிரமணியஸ்வாமி கோவிலில், ஆண்டுதோறும் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இவ்விழா, இன்று 24.10.2014ம் தேதி துவங்கி, 30.10.2014ம் தேதி வரை நடக்கிறது.

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலம், சென்னிமலை மலை கோவிலாகும். 3,000 ஆண்டு பழமை வாய்ந்த திருத்தலம். 18 சித்தர்களுள் ஒருவரான பின்நாக்குச்சித்தர் வாழ்ந்து, முக்தியடைந்த திருத்தலம். முருகப்பெருமானுக்கு உரிய, 16 திருமூர்த்தங்களும், இக்கோவிலில் காணப்படுவது தனிச்சிறப்பு.

இங்கு, இன்று (24ம் தேதி) காலை, 8 மணிக்கு,
கந்த சஷ்டி விழா துவங்குகிறது. அன்று காலை, 8 மணிக்கு, சென்னிமலை கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து, முருகன் வள்ளி தெய்வானை சமேதராக, உற்சவமூர்த்தி புறப்பாடு துவங்கி, மலை கோவிலை அடையும். காலை, 9.30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி, 10.30 மணிக்கு மகா பூர்ணாகுதியும், 11 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம், 12 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மதியம், 12.30 மணிக்கு வள்ளி தெய்வானைக்கு அபிஷேம் நடைபெறும். ஒரு மணிக்கு அன்னதான விழா நடக்கிறது.

இந்த அபிஷேகம் மற்றும் அன்னதானம், வரும், 29ம் தேதி வரை நடக்கும். 29ம் தேதி இரவு, உற்சவர் மலை அடிவாரத்தில் எழுந்தருளி இரவு, 8 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா, சென்னிமலை நான்கு ரத வீதிகளில் நடக்கிறது. இதில், மேற்கு ரத வீதியில், ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ரத வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ரத வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்து, முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் எழுந்தருள்வார். தொடர்ந்து, 30ம் தேதி காலை, 11 மணிக்கு முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்யும் திருமண விழா நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை, செங்குந்தர் கைக்கோள முதலியார் ஸ்ரீகந்த சஷ்டி விழாக் கமிட்டியார், மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, 24 முதல், 29ம் தேதி வரை, ஐந்து நாட்களும், தினமும் காலை, 9 மணிக்கு மலை கோவிலுக்கு செல்ல, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவில் காப்பு கட்டி, சிறப்பு விரதம் இருப்பவர்கள், விழா ஏற்பாட்டாளர் விஸ்வநாதனிடம், 99656 22442 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்

No comments:

Post a Comment