Monday, September 15, 2014

பைரவர் கோவில்கள்

 

தாடிக்கொம்பு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்


வைரவன்பட்டி:

பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.

திருக்கோஷ்டியூர்:

பயம் போக்கும் பைரவர்
இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர்.

பைரவபுரம்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெண்பாக்கம் அருகில் உள்ளது பைரவபுரம். ஸ்வர்ண கால பைரவர் கோயில் இங்கே உள்ளது.

சிவபுரம்:

இது கால பைரவ ÷க்ஷத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோயிலாக விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

எமனேஸ்வரம்:

எமனேஸ்வரமுடையார் கோயிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

காளையார் கோயில்:

இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார். இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருநாகை:

நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.

மதுரை:

இங்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும், கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர். மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோயிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது. இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.

திருவண்ணாமலை:

இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.

திருமயம்:

இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.

பொன்னமராவதி புதுப்பட்டி:

இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

சேந்தமங்கலம்:

இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார். எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும்.

முறப்ப நாடு:

எந்தக் கோயிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார். ஆனால் முறப்ப நாடு கோயிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர். இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவாஞ்சியம்:

தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.

திருச்சேறை:

கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.

திருப்பாச்சேத்தி:

மதுரை - ராமேஸ்வரம் சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

நாகை:

இங்கு சம்ஹார பைரவராக தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.


கும்பகோணம்:

வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம்.

காளஹஸ்தி:

இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.

பழநி:

அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.

சீர்காழி:

சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும். சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய கால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.

சேலம்:

இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார். மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.

திருவான்மியூர்:

சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.

இலுப்பைக்குடி:

இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர். இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

அந்தியூர்:

ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோயிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

காஞ்சிபுரம்:

உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோயிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார். சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.

திருவியலூர் (திருவிசநல்லூர்):

கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் உள்ளனர்
---

No comments:

Post a Comment