Saturday, August 16, 2014

ஸ்ரீ பசும்பொன் மயிலாம்பாள் உடனமர் ஸ்ரீ தாருகாவனேஸ்வரர்_ஆலயம்_திருப்பராய்த்துறை

ஸ்ரீ பசும்பொன் மயிலாம்பாள் உடனமர் ஸ்ரீ தாருகாவனேஸ்வரர்_ஆலயம்_திருப்பராய்த்துறை



திருச்சியிலிருந்து 15 கிலோமீட்டரில் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் அமைந்திருக்கிறது.

இறைவன் - தாருகாவனேஸ்வரர், பராய்த்துறை நாதர்.

இறைவி - பசும்பொன் மயிலாம்பாள், ஹேமவர்ணாம்பாள்.

தல மரம் - பராய் மரம். (இது பிராய், பிறாமரம், குட்டிப்பலா என்றெல்லாம் குறிக்கப்பெறுகிறது. சொரசொரப்பான கரும்பச்சை இலைகளையுடைய வெள்ளை நிற மரம். இலை, பால், பட்டை முதலியன மருத்துவப் பயனுடையவை.)

பொய்கை - அகண்ட காவேரி.

பாடியவர்கள் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

வரலாறு

 தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்று ஆணவமும், அவர்களது மனைவியர் தாங்களே அழகானவர்கள், கற்புக்கரசிகள் என்று அகந்தையோடு இருந்தனர்..

மகாதேவனும், மகாவிஷ்ணுவும் அவர்களைத் திருத்திப் பணிகொள்ள விழைந்தன்ர். சிவன் காண்போரைக் கவரும் பேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்திக் கொண்டார்.மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி எனும் பெண்ணாக மாறினார். இருவரும் தாருகாவனம் வந்தனர். ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரைப் பின்தொடர்ந்தனர்.

சிவனது பேரழகைக்கண்டு வியந்த ரிஷிபத்தினிகள் தங்களது கற்பையும் மறந்து அவர் பின்னே சென்றனர். தங்கள் மனைவியர் பிச்சை எடுக்கும் ஒருவனுடன் சென்றதைக் கண்ட ரிஷிகள், வந்திருப்பது ஏதோ மாயக்காரன் என்றெண்ணி அவரை தாருகாவனத்தை விட்டுச் செல்லும்படி விரட்டினர். இருவரும் செல்ல மறுத்தனர். கோபம் கொண்ட ரிஷிகள் சிவனுடன் சண்டையிட்டனர். அவர்கள் பல யுக்திகளை கையாண்டும் சிவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்கள் ஏவிய விலங்குகளையும், எய்த ஆயுதங்களையுமே தன் உடலில் ஏந்திக் கொண்டார் சிவன்.

சிவனை அழிக்க முடியாமல் கலங்கிய மகரிஷிகள் குழம்பி நின்றனர். சிவன் அவர்கள் முன்பு பேரழகனாக காட்சி தந்தார். உண்மை உணர்ந்த மகரிஷிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர். சிவன் அவர்களுக்குக் குருவாக இருந்து மன்னித்தருளி, சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.

தலத்தின்_சிறப்புகள்!


தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 3 ஆவது திருத்தலம்.

பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது. இத்தலத்திற்கு 'தாருகாவனம்' என்றும் பெயருண்டு. (பராய் மரம், வடமொழியில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது.)

முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.

கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும் இறைவன் பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஸ்வரன்" என்றும் குறிக்கப்படுகிறது.

மாயூரத்தில் (மயிலாடுதுறை) ஐப்பசிமாதம் கடைசி நாளன்று "கடை முழுக்கு' எனும் துலா ஸ்நானம் நடப்பதுபோல இங்கு ஐப்பசி மாதம் முதல் தேதியில் காவேரிக் கரையில் "முதல் முழுக்கு' எனும் துலாஸ்நானம் நடக்கிறது. இந்நாளில் சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார். இந்நாளில் காவேரியில் நீராடி சுவாமியை வணங்கினால் பாவங்கள் நீங்கும்.

பிட்சாடனராக வந்த சிவன் அர்த்த மண்டபத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார்.முன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்றுகொண்டு சிவ லிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும்.

தன்மீது விருப்பமாய் இருப்பாரை அறிவான் இத்தலத்து ஈசன் என்கிறார் திருநாவுக்கரசர்.

நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராவளைத் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை அறிவரே.

"நெருப்பு அராவி நிமிர்ந்ததனையொத்த நீண்ட சடையையும், தந்தத்தை அராவி வளைத்ததுபோன்ற பிறைமதியையும் உடையராய்த் திருப்பராய்த்துறையில் விரும்பியெழுந்தருளி இருக்கும் அருட்செல்வர் தம்மிடம் விருப்பமாக உள்ளவர்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவர்."

ஈசனின் பண்புகளைத் தெரிவிக்கிறார் திருஞானசம்பந்தர்.

விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகளே.

"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''



No comments:

Post a Comment