Friday, August 29, 2014

108 திவ்ய தேசம்

திருநீர் மலை

 

108 திவ்ய தேசம் என்றால் என்ன ? கி.பி 6 முதல் கி.பி 9 ஆம் நூற்றாண்டுக்குள் திருமாளின் அம்சம் பொருந்திய 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் என்று நூல் தொகுப்பில் இந்த 108 ஆலயங்களின் மேன்மையை பற்றி கூறியுள்ளார்கள் எனவே இந்த 108 ஆலயங்களும் திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. திவ்யம் என்றால் மேலான என்று பொருள்படும். இந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர் மலை என்ற ஆலயம் சென்னை புறநகரில் ஒரு மலையின் மேல் அமைந்துள்ளது. மலையும் கிராமமும் சேர்ந்த இப்படிப்பட்ட ஒரு அழகான இடம் சென்னையில் இருப்பது ஒரு அருமையான விஷயம். சென்னை நகரில் இப்படிப்பட்ட அருமையான சூழ்நிலையில் இவ்வாலயம் அமைந்திருப்பது சென்னை வாசிகள் பலருக்கு தெரியாது. . இந்த மலையின் மேல் சென்றவுடன் நம்மை அறியாமலேயே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நம்மை வந்தடையும். இவ்வாலயத்திற்கு பல்லாவரம், பம்மல் மற்றும் குன்றத்தூர் வழியாக செல்லலாம்.
 

இந்த திருகோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் போல் சயன கோலத்தில் பெருமாளை காணலாம். மூலஸ்தானத்தின் வலது புறங்களில் நரசிம்ம பெருமாளும், வாமன அவதாரமான உலகலந்த பெருமாளும், மலையின் கீழே நீர் வண்ணப் பெருமாளும் காட்சி அளிக்கின்றனர். இந்த ஆலயத்தில் பெருமாள் நின்றான், கிடந்தான், இருந்தான் மற்றும் நடந்தான் என்று நான்கு நிலைகளில் காட்சி அளிக்கிறார். நின்றான் என்பது மலையின் கீழ் உள்ள நீர்வண்ண பெருமாளையும், கிடந்தான் என்பது பெருமாள் ஆதிசேஷன் மேல் சயன கோலத்திலும், நடந்தான் என்பது வாமன அவதாரமான உலகலந்த பெருமாள் ஒரு காலை தூக்கிய நிலையிலும் , இருந்தான் என்பது நரசிம்மப் பெருமாள் சாந்தமாய் அமர்ந்த நிலையிலும் நான்கு விதமாக பெருமாள் காட்சி அளிக்கின்றார்.

இக்கோவிலில் சென்று வழிபட்டால் நான்கு திவ்ய தேசங்களான நாச்சியார் கோவில், திருவாலி, திருக்குடந்தை மற்றும் திருக்கோயிலூரை வழிப்பட்ட பலனை அடையலாம் என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதியை வணங்கிய பலனை இவ்வாலயத்தில் அடையலாம் என்று பூதத்தாழ்வார் குறிப்பிடுகிறார்.

இங்குள்ள ஸ்ரீரங்கநாதர் தானாக உருவாகிய சுயம்பு மூர்த்தி என்று வரலாறு கூறுகின்றது மேலும் வால்மீகி, மார்க்கண்டேயர் மற்றும் பிருகு ரிஷிகள் தவத்திற்கு இணங்க இங்கு பெருமாள் தோன்றியாதாக வரலாறு கூறுகின்றது. இக்கோவிலின் சிறப்புகள் பிரமாண்டபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்களாம். துவாபரயுகத்தில் திருநீர்மலை மற்றும் அகோயிலம் மட்டும் இங்கு இருந்ததாம். அர்ஜுனனுக்கு நரசிம்மர் இம்மலையில் அசுவமேதயாகம் மூலம் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்திற்கு ஒருமுறையாவது செல்லவேண்டும். பல சிறப்புமிக்க பெருமாள் கோவில்களில் கூட்டமே இல்லை என்றாலும் மக்களை கூண்டில் அடைத்தோ அல்லது மணிக்கணக்கில் வரிசையில் நிற்க்கவைத்தோ மக்களை மண உலைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர் இதனால் மனநிறைவான தரிசனம் கிடைப்பது அரிது. இங்க வந்தால் உங்கள் மனம் ஒரு பரவசநிலையை அடைவது உறுதி.








No comments:

Post a Comment